தாரா கணேசனின் ஒரு கவிதை


இறுக வாய் கட்டப்பட்ட
பாலீதின் உறையை
முகத்திற்கு நேரே
தூக்கிப்பிடிக்க
கொடுத்திருந்த மீன்கள்
குறு வட்டமிட்டு
மிரண்டலைகின்றன
தம் இடமாற்றத்தின்
காரணம் புரியா
சிறைச்சாலை கைதியென
…….
கனக்கிறது
கையிலிருக்கும் உறை”
மீன், மீன் உணவு பற்றி யாராவது நல்ல எழுத்தாளர் எழுதியிருந்தால் கூட அந்தப் பகுதியை தள்ளிவிட்டே படிப்பேன்” என்று க.நா.சு எழுதியிருந்தார். அப்படிப்பட்டவர் டில்லியிலோ வேறு எங்கோ “புலவு” உணவை ருசி பார்த்ததாகவும் ஒரு தடவை தெரிவிதிருக்கிறார்.

நான் காய்கறி உணவுவாதி. மாமிசம், மீன் உணவு வகைகளைப் பார்த்தது கூட இல்லை. பெரிய வீடுகளிலோ உணவு விடுதிகளிலோ உள்ள கண்ணாடித் தொட்டிகளில் வலம் வரும் மீன்கள், இந்தக் காரணத்தால்தான் என்னைக் கண்டு அஞ்சாமல் பக்கத்தில் வந்து உற்றுப் பார்க்கின்றனவோ என்று இறுமாந்திருக்கிறேன்.

இடமாற்றத்தின் காரணம் புரியாது. அதாவது இடமாற்றம் போன்ற விஷயங்களை இந்த மீன் போன்ற உயிர்கள் எண்ணிப் பார்ப்பதாகவே வைததுக் கொள்வோம் - சரி. ஆனால், இந்த மிரளுதல் என்பது ஓர் உணர்வு – உயிரின் உணர்வு அது. உயிரின பிரச்சனை. புரிய வேண்டிய அவசியமில்லை. இந்த மிரளுதல் விஷயத்தில் மீன் மனிதன் என்றெல்லாம் பேதம் இல்லை. உயிரின பரிணாம சமாச்சாரம். அது எங்கேயும் போய்விடாது. மீனோ அல்லது நாமோ போன பின்னரும் இன்னொன்றால் தொடரும் சங்கதி – முடிவே இல்லாத சங்கதி.
பரிணாம வாதம் கவிதையாகி விடாது. ஆனால் இங்கே பிரிவுபசாரமாக – பச்சாதாபமாக அந்த உறை முத்தமிடப்படுகிறது.
கனக்கிறது
கையிலிருக்கும் உறை

பண்டமாற்றமாகப் போகிறதோ பண்டமாகப் போகிறதோ என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்பால் ஒரு விநாடி மனித மனம் என்ற ஒன்று மாசு இல்லாமல் ஆகி அங்கே அருள் என்ற ஒன்றுமில்லாத ஒன்று வியாபித்து நம்மையும் மாற்றி விட்டிருப்பதை அனுபவிக்க முடிகிறது.

கவிஞர் நிறையப் படித்தவர் என்று தெரியவருகிறது. சொல்லவும் படுகிறது. ஆனால் சிறைச்சாலைக் கைதி மீது பரிவு காட்ட எந்த படிப்பம் பயன்பட்டிருக்காது. கவிதை தோன்றும் போது படிப்பாவது அறிவாவது, எல்லாம் மாயை. அது ஒன்றுதான் நிசம். கனக்கிறது கையிலிருக்கும் உறை என்று கூற எது வழிகாட்டியிருக்கும்?

ருதுவனம் என்ற கவிதைத் தொகுப்பில் கவிஞர் தாரா கணேசனின் கவிதைவரிகள் எனக்குப் பிடித்திருக்கின்றன.


- மா. அரங்கநாதன்

1 comment: