ஊரின் மேற்குப்புறமாக இருக்கும் அம்பலத்தின் பின்பக்கம் இரவில் சென்று பார்த்தால், வயல் வெளிகளைக் கடந்து தூரத்தில் மின் விளக்கு எரிவதைக் காணலாம். அதைப்பார்க்க, கூடி நிற்ப்போம். மோட்டார் வண்டி சாலையில் ஓடுவதைக்காண நான்கு மைல் நடக்கவேண்டும்.
செல்பேசிகளும், கணினிகளும் நிறைந்து ஐந்நூறு ஆண்டுகளில் காணவேண்டிய மாற்றம் ஒரு ஐம்பது ஆண்டுகளில் நம்மிடையே வந்து சேர்ந்த்தை என்ன சொல்ல? நினைத்துப்பார்த்தால் வருவது வேதனையா-வியப்பா-மகிழ்ச்சியா-என் பெற்றோர் காலத்திற்கும் என் காலத்திற்கும் இந்த மாற்றம்போல, என் பிள்ளைகள் காலத்திற்கு இல்லையே- திடீரென எங்கிருந்தோ வந்து குதித்தாற்போல.
பள்ளியில் படிக்கும்போது கல்கண்டில் கதையொன்று கோபுவின் கதை என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். தமிழ்வாணன் மணியார்டர் கூப்பனில் தம்பி என்று வாழ்த்தி இரண்டு ரூபாய் அனுப்பியிருந்தார். தமிழாசிரியர் பிச்சைக்கண்ணு அடவியார் அதைக்கேட்டு புன்னகை புரிந்தார். ஆனால் கணித ஆசிரியர் முத்தையா அவர்கள் சிறிது கூட மாற்றமில்லாது, “போதுமே வேறென்ன வேண்டும்” என்று நிறுத்திக்கொண்டார். அவரைக்குற்றஞ்சொல்ல முடியாது. எனது கணித ஞானம். பள்ளிப்படிப்பு சீராக அமையாததற்கு இந்தக்கணக்கு ஒரு காரணம். பெற்றோர் எழுத படிக்கத் தெரிந்தவர்களாகவும் சில குறள் – கம்பராமாயணச்செய்யுட்களை தெரிந்தும் வைத்திருந்தனர். அக்கால கட்டத்தில் வேண்டிய உதவி பெற்றது நூல் நிலையங்களில் இருந்துதான்.