கவிஞர் பன் இறையின் அமைதியும் பயங்கரமும்

இயல்பாய் எல்லாமே
போய்க் கொண்டிருக்கிறது.
அதிர்ச்சியான தொலைபேசி அழைப்புகளில்லை.
குழந்தைகள் எதையும் உயரத்திலிருந்து
தன் மீது இழுத்துக் கொள்ளவில்லை.
திரும்பத் திரும்பக் காட்டப்படும். பேரழிவுக் காட்சிகள் இல்லை.
தலையில் அடித்துக் கொண்டு தெருவில் யாரும் ஓடவில்லை.
எல்லாம் அமைதியாக, சரியாக போய்க் கொண்டிருக்கிறது.
தன் பாதையில் அமைதி எவ்வளவு மெதுவாய் சாதுர்யமாக செல்கிறது.
இது தான் பயங்கரமானது.
பெரும்புயலுக்கு முன் கடல், தரை யாவும் அளவிற்கு அதிகமான அமைதியோடிருப்பதாகத் தெரியும். தாகூரின் ‘புயல்’ நாவலில் கூட அமைதி திரும்பி அங்கே விவரிக்க முடியாத ஒரு பயங்கரம் தொற்றி நிற்கும் புயலுக்குப்பின் அமைதி என்பது பேச்சிற்குத்தான்.
தொண்ணூறுகளில் கட்டுடைதல் பற்றி நிறையப் பேசப்பட்டது.
இங்கே கொஞ்சம் சுயபுராணம் பாடலாம். முன்றில் அலுவலகத்திற்கு முக்கியமான நவீன இலக்கிய கர்த்தாக்கள் வருகையில் மேற்படி கட்டுடைதல் பற்றி விவாதம் நடக்கும். கவிஞர் பழமைலையிலிருந்து இந்திரன், சாருநிவேதிதா, நாகார்ஜீனன், ஏ.எஸ்.பன்னீர்செல்வம், ரவிக்குமார், தமிழவன், அ.மார்க்ஸ், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி போன்றோர் சந்திக்கையில் அநேகமாக எல்லாராலும் பேசப்படும்.

சிறு கருத்து வேறுபாடுகளால், விஷயம் பாழடிக்கப்பட்டுவிடாது.

“ஏற்கனவே இந்த கட்டமைப்பு உடைந்து ஏற்பட்டதுதானே இப்போது இருக்கும் கட்டமைப்பு” என்று கவிஞர் பிரமிள் எழுதினார்.

கடல் கொந்தளிப்பும் தரைக்காற்றும், சூறாவளியும் பயங்கரம்தான். அமைதி திரும்பும் என்று நினைத்துக் கொண்டிருப்பது, அமைதி நிலை கொள்ளும் போது இது பயங்கரத்திற்கு அறிகுறி என்று இருப்பதும் ஒன்றுதான்.

இம்மாதிரி நிலையை சில கலைஞர்கள் திரைப்படங்களில் காட்ட முயற்சி செய்துள்ளனர்.

கவிஞர் பன் இறை மிகவும் வெளிப்படையாக இதைக் கையாள்கிறார். இதுவே நல்லது என்று முடிவு செய்யப்படும்போது அது அல்ல என்ற கருத்தும் பிறந்துவிடுகிறது.
நகுலன் இதை வேறுவிதமாக கூறியிருக்கிறார். நவீன இலக்கிய விமர்சகர்களும் பல்வேறு விதத்தில் விளக்கம் தருகின்றார்.

சரி பலரும் சொன்ன ஓர் உண்மையை சொல்லிவிடுவது கவிதையாகிவிடுமோ என்றால், இல்லை, கவிஞர் இந்தக் கவிதையில் அது எவ்வளவு சாதுர்யமாகச் செல்கிறது என்று அதிசயிக்கிறார்.

மதுகர என்று ஒரு வண்டை அழைத்து காளிதாசன் கவிதை சொல்கிறது.

“நாங்கள் எல்லாம் உண்மையைத் தேடி வீணாய் போனோம். நீயல்லவா அதைக் கண்டுவிட்டாய்”.

நீ தான் அதைக் கண்டுபிடித்தாய் என்றிருந்தால் அது கவிதையாகத் தோன்றுமா?

அதிசயப்படுகையில் அங்கு விஷயங்கள் எல்லாம் போய் – அறிவு எல்லாமற்று – மௌனம் நிலவுகிறது. கவிதையின் முடிவு மௌனம் தானே.

கவிஞர் பன் இறை அவர்களின் "பருந்துகளைப் போலான தேன் சிட்டுகள்" தொகுப்பில், மேற்படி அமைதி என்ற கவிதை சிறப்பாகத் தெரிகிறது.

- மா.அரங்கநாதன்01.06.12
http://www.maaranganathan.com

தாரா கணேசனின் ஒரு கவிதை


இறுக வாய் கட்டப்பட்ட
பாலீதின் உறையை
முகத்திற்கு நேரே
தூக்கிப்பிடிக்க
கொடுத்திருந்த மீன்கள்
குறு வட்டமிட்டு
மிரண்டலைகின்றன
தம் இடமாற்றத்தின்
காரணம் புரியா
சிறைச்சாலை கைதியென
…….
கனக்கிறது
கையிலிருக்கும் உறை”
மீன், மீன் உணவு பற்றி யாராவது நல்ல எழுத்தாளர் எழுதியிருந்தால் கூட அந்தப் பகுதியை தள்ளிவிட்டே படிப்பேன்” என்று க.நா.சு எழுதியிருந்தார். அப்படிப்பட்டவர் டில்லியிலோ வேறு எங்கோ “புலவு” உணவை ருசி பார்த்ததாகவும் ஒரு தடவை தெரிவிதிருக்கிறார்.

நான் காய்கறி உணவுவாதி. மாமிசம், மீன் உணவு வகைகளைப் பார்த்தது கூட இல்லை. பெரிய வீடுகளிலோ உணவு விடுதிகளிலோ உள்ள கண்ணாடித் தொட்டிகளில் வலம் வரும் மீன்கள், இந்தக் காரணத்தால்தான் என்னைக் கண்டு அஞ்சாமல் பக்கத்தில் வந்து உற்றுப் பார்க்கின்றனவோ என்று இறுமாந்திருக்கிறேன்.

இடமாற்றத்தின் காரணம் புரியாது. அதாவது இடமாற்றம் போன்ற விஷயங்களை இந்த மீன் போன்ற உயிர்கள் எண்ணிப் பார்ப்பதாகவே வைததுக் கொள்வோம் - சரி. ஆனால், இந்த மிரளுதல் என்பது ஓர் உணர்வு – உயிரின் உணர்வு அது. உயிரின பிரச்சனை. புரிய வேண்டிய அவசியமில்லை. இந்த மிரளுதல் விஷயத்தில் மீன் மனிதன் என்றெல்லாம் பேதம் இல்லை. உயிரின பரிணாம சமாச்சாரம். அது எங்கேயும் போய்விடாது. மீனோ அல்லது நாமோ போன பின்னரும் இன்னொன்றால் தொடரும் சங்கதி – முடிவே இல்லாத சங்கதி.
பரிணாம வாதம் கவிதையாகி விடாது. ஆனால் இங்கே பிரிவுபசாரமாக – பச்சாதாபமாக அந்த உறை முத்தமிடப்படுகிறது.
கனக்கிறது
கையிலிருக்கும் உறை

பண்டமாற்றமாகப் போகிறதோ பண்டமாகப் போகிறதோ என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்பால் ஒரு விநாடி மனித மனம் என்ற ஒன்று மாசு இல்லாமல் ஆகி அங்கே அருள் என்ற ஒன்றுமில்லாத ஒன்று வியாபித்து நம்மையும் மாற்றி விட்டிருப்பதை அனுபவிக்க முடிகிறது.

கவிஞர் நிறையப் படித்தவர் என்று தெரியவருகிறது. சொல்லவும் படுகிறது. ஆனால் சிறைச்சாலைக் கைதி மீது பரிவு காட்ட எந்த படிப்பம் பயன்பட்டிருக்காது. கவிதை தோன்றும் போது படிப்பாவது அறிவாவது, எல்லாம் மாயை. அது ஒன்றுதான் நிசம். கனக்கிறது கையிலிருக்கும் உறை என்று கூற எது வழிகாட்டியிருக்கும்?

ருதுவனம் என்ற கவிதைத் தொகுப்பில் கவிஞர் தாரா கணேசனின் கவிதைவரிகள் எனக்குப் பிடித்திருக்கின்றன.


- மா. அரங்கநாதன்

புதுச்சேரி

புதுச்சேரி விழித்துக் கொள்ளும் முன்னரே நான் எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தேன். அண்ணாநகர் முதன்மை சாலை - கடைசியோ முதலோ - அது வரை வந்து நெல்லித் தோப்பு பக்கமாக திரும்பாது, வில்லியனூர் சாலையில் மெதுவாக நடந்தேன். அமைதியாக இருந்தது இடம். ஆள் அரவம் அதிகம் இல்லை. தென்னை மரங்கள் உயர்ந்து நின்றன. மற்ற பிரதேசங்களை விட, மரத்தின் உயரம் அதிகம் என்று தோன்றியது - இருக்கும். ஏதாவது வேற்றுமை தெரிய வேண்டும். பத்தாண்டகளாக வந்து போகிற இடம்தான். இருந்தாலும் புதிதாகவே தெரிந்தது. பழக வேண்டும். ஒரு வேளை நிரந்தரமாக இங்கேயே இருந்து அத்துடன் முடிந்தாலும் நல்லதே.

புதுச்சேரி விழித்துக் கொள்ளவில்லை என்று சொன்னது தவறு. காலையில் நடப்பவர்கள் அதிகமில்லையே தவிர வேறு இடங்களிலிருந்து வந்த வண்டிகள் ஓடிக்கொண்டு தான் இருந்தன. நாய்கள் தெருக்களில் அதிகமாக தென்பட்டன. குரைப்பது குறைவு.

புதுச்சேரி கிராமமா நகரமா என்ற ஐயப்பாடு ஏற்கனவே உண்டு. கிராமத்திற்கு அது, கிராமம். மண் குடிசைகளும், ஐரோப்பிய நகரங்களைப் பிரதிபலிக்கும் கட்டிடங்களும் இருந்தபடியால், பார்த்துக் கொள்ள முடியுமே தவிர பதில் சொல்ல முடியாது. ஒரு சித்தர் பூமி என்று சொல்லலாம். அப்படித்தான் முடியாது. ஒரு சித்தர் பூமி என்று சொல்லலாம். அப்படித்தான் சொல்ல வேண்டும். சித்தர்களைத்தான் படிக்க முடியுமே தவிர கேள்வி கேட்க முடியாது. குறைந்தபட்சம் கேள்விகளுக்கு பதில் கிடைக்காது. முதலில் கேள்வி தோன்றுவதே கஷ்டம்.

இந்த வயதிற்கு இந்த ஆரோக்யம் போதும் என்று மருத்துவ நண்பர் பட்டணத்தில் கூறினார். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவன் ஆன படியால் - அதுவும் நலத்துறை - மருத்துவர்களோடு நட்பு அதிகம். உடல் நலத்தைப் பற்றி திருப்தியாக சொல்ல முடியாது. மருத்துவர்களின் நட்பு மட்டும் உடல் நலத்தை தந்து விடாது - நடக்க வேண்டும். நேற்று நடந்து விட்டபடியால் இன்றைக்கு மாலையில் நடந்து கொள்ளலாமே என்றுதான் முதலில் எண்ணம் தோன்றியது. மாலையில் நடப்பது கடினம். விரைந்து செல்லும் மக்கள் கூட்டத்தில் நடை பயில முடியாது. கீழே விழ வேண்டியும் வரலாம். காலையில் தான் நன்று. பலர் நடந்து செல்வது இப்போது தெரிகிறது. வேறு சாலைகளில் இதைவிட அதிக கூட்டம் இருக்கலாம். பேசிக்கொண்டே நடக்கிறார்கள். இங்கே பேசும் தமிழ் மனத்திற்கு இதமளிக்கிறது. அநேகமாக ஆங்கில பேச்சு இல்லை. பட்டணத்தில் ஆங்கிலம் பேசியாக வேண்டும். நாற்பதுகளில் சென்னையில் தெலுங்கு பேசுவோர் அதிகமாக இருக்கும் அரசு அலுவலகங்கள் இருந்தன. அப்போது அங்கே ஆங்கிலம் தான் துணை. நாட்டிற்கு பொது மொழி வேண்டும் என்கிறார்கள் - உலகத்திற்கு வேண்டாமா என்ன? நிறைய படித்த நண்பர் சாரு நிவேதிதா கூட இந்தியாவின் பொதுமொழி இந்தி என்று குறிப்பிடுகிறார். அது சரிதானா? நாட்டு விடுதலைக்கு முன்னர் இந்தியாவின் பொது மொழி எதுவோ? அது சரி. ஒரு நாட்டிற்கு பொது மொழி கட்டாயம் தேவை - ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று சொன்னால் அவ்வாறு பொதுமொழி இல்லாத நாடு ஒரு நாடாக இருந்திருக்குமா அல்லது நாடாகுமா - தெரியவில்லை.

கொசுக்கள் இருக்கின்றன. கொசுக்களால் மலேரியா பரவுகிறது என்று ரொனால்டு ராஸ் சொல்லி அறிந்தாயிற்று. சங்க காலத்திலும் மலேரியா இருந்திருக்கும். அப்போது யாரும் கொசுவை குற்றம் சொல்லியிருக்க மாட்டார்கள். அம்மையப்பன் என்று மணிவாசகர் அழைத்த சிவனையும் அப்படித்தானே பார்க்க முடியும். விவசாய நாகரீக கால கட்டத்திற்கு முன்னர் அப்பன் இருக்க முடியாததாகையால், சிவனும் இங்கே அப்படித்தான். இருக்கட்டும். என்றாலும் கூட எப்படி இந்த மணிவாசகர் ஒரு சித்தாந்தவாதியாகவும் கவிஞனாகவும் இருக்க முடிந்தது என்று தெரியவில்லை. சித்தாந்தம், தத்துவம் எல்லாம் அறிவுலகை சார்ந்தது. கவிஞன் அறிவுலகவாதி இல்லை அல்லவா? அப்படிப்பட்டவர்கள் கவிஞர் என்றும் பெயரெடுப்பது ரொம்பவும் கஷ்டம். எல்லாரும் வள்ளுவராகி விட முடியாது.

வணிகப் பத்திரிகைகள் இங்கு எந்தப் பகுதியிலம் கிடைக்கின்றன. சிறு பத்திரிகைகளை வாங்க குறிப்பிட்ட இடத்தில் உள்ள கடைவரை செல்ல வேண்டி உள்ளது. அதனாலென்ன - சிறு பத்திரிகைகளும் குறைந்துவிட்டன. மதவெறித்தனம் கொண்ட பத்திரிகைகூட தமிழில் சிறு பத்திரிகை என்று சொல்லிக் கொண்டு வெளிவருகிறது. வணிக பத்திரிகை என்று சொல்லிக் கொண்டு வெளிவருகிறது. வணிக பத்திரிகைகள் எங்கும் கிடைக்கின்றன. ஆனால் படிக்க வேண்டிய எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்தே விடலாம். பத்திரிகை கடைகளில் கூட்டம் சேருகிறது. காலையில் முக்கிய செய்திகளை பத்திரிகை படிப்பதற்கு பதிலாக அந்தப் பத்திரிகை சுவரொட்டிகளை கண்டே அறிந்துவிடலாம்.

புதுச்சேரியின் எல்லா பகுதிகளும் பட்டணமாக மாறும் காலம் விரைவில் இருக்கும். கிராமச் சாயல் மாறிவிடும். அது வரப்பிரசாதமா - சாபக்கேடா - எப்படியும் இருக்கலாம். இங்குள்ள கவிஞர் ஒரு கவிதையில்,
எங்கேயடா என் கிராமம்
அடேய்? ரியல் எஸ்டேட்
பாவிகளே?

என்று மண்ணை வாரித் தூற்றுகிறார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு சொல் - இரு சொல் - இவற்றில் கவிதை அம்சம் வெளிப்பட்டு விடுகிறது. கவிஞன் வெளிப்பட்டு விடுகிறான்.
- விருட்சம், 2008

அன்புடன் வரவேற்கிறேன்


ஊரின் மேற்குப்புறமாக இருக்கும் அம்பலத்தின் பின்பக்கம் இரவில் சென்று பார்த்தால், வயல் வெளிகளைக் கடந்து தூரத்தில் மின் விளக்கு எரிவதைக் காணலாம். அதைப்பார்க்க, கூடி நிற்ப்போம். மோட்டார் வண்டி சாலையில் ஓடுவதைக்காண நான்கு மைல் நடக்கவேண்டும்.

செல்பேசிகளும், கணினிகளும் நிறைந்து ஐந்நூறு ஆண்டுகளில் காணவேண்டிய மாற்றம் ஒரு ஐம்பது ஆண்டுகளில் நம்மிடையே வந்து சேர்ந்த்தை என்ன சொல்ல? நினைத்துப்பார்த்தால் வருவது வேதனையா-வியப்பா-மகிழ்ச்சியா-என் பெற்றோர் காலத்திற்கும் என் காலத்திற்கும் இந்த மாற்றம்போல, என் பிள்ளைகள் காலத்திற்கு இல்லையே- திடீரென எங்கிருந்தோ வந்து குதித்தாற்போல.

பள்ளியில் படிக்கும்போது கல்கண்டில் கதையொன்று கோபுவின் கதை என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். தமிழ்வாணன் மணியார்டர் கூப்பனில் தம்பி என்று வாழ்த்தி இரண்டு ரூபாய் அனுப்பியிருந்தார். தமிழாசிரியர் பிச்சைக்கண்ணு அடவியார் அதைக்கேட்டு புன்னகை புரிந்தார். ஆனால் கணித ஆசிரியர் முத்தையா அவர்கள் சிறிது கூட மாற்றமில்லாது, “போதுமே வேறென்ன வேண்டும்” என்று நிறுத்திக்கொண்டார். அவரைக்குற்றஞ்சொல்ல முடியாது. எனது கணித ஞானம். பள்ளிப்படிப்பு சீ
ராக அமையாததற்கு இந்தக்கணக்கு ஒரு காரணம். பெற்றோர் எழுத படிக்கத் தெரிந்தவர்களாகவும் சில குறள் – கம்பராமாயணச்செய்யுட்களை தெரிந்தும் வைத்திருந்தனர். அக்கால கட்டத்தில் வேண்டிய உதவி பெற்றது நூல் நிலையங்களில் இருந்துதான்.